
அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இணைய தளத்தில் வெளியான நாளன்று, தமிழகம் முழுதும் விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அங்கும் இங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் பெயர் வந்திருக்கிறதா என்றும் நண்பர்கள் பெயர் வந்திருக்கிறதா என்று விசாரிப்பதுவுமாய் இருந்தார்கள்.
நான் [புகழ். ஜெய பிரபு, தஞ்சை ஒன்றிய தலைவர்] மற்றும் ஜெயசெல்வன்[ தஞ்சை மாவட்ட பொருளாளர்] இருவரும் இணையதளத்தில் எங்கள் இருவர் பெயரையும் காணாது , அதிர்ச்சியடைந்தோம். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் சந்தேகப் பட்டுக் கொண்டோம் என்றே சொல்லலாம்- ஏனென்றால் நாங்கள் இருவரும் தான் ஒன்றியம் முழுக்க விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பெற்று சரி செய்து அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று அனுப்பி வைத்தோம்.
நடந்தது நடந்து விட்டது, எந்த புண்ணியவான் செய்த நற்செயலாலோ நம் விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டது என்றாலும் மாநிலத் தலைமை மேல் முழு நம்பிக்கையோடு, விண்ணப்பித்தமைக்கான அத்தாட்சிகளோடு அன்று இரவே சென்னைக்கு பயணமானோம்.
நம் தலைவர் தியாகராஜன் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டோம். விவரங்களை தெரிவித்தோம். மாலை 6 மணிக்கு பெருங்குளத்தூரில் இருக்கும் மாநிலத் தலைமை அலுவலகத்தில் தம்மை வந்து சந்திக்குமாறு சொன்னார். சென்றோம். வாயிலில் காத்திருந்தோம்.... அரைமணி நேரத்தில் வந்தார். விவரம் கேட்டார் சொன்னோம். சிரித்துக்கொண்டு தலையில் அடித்துக் கொண்டார்.
என்னப்பா இது? செயல் வீரர்களுக்கா இந்த நிலைமை ?
என்று கூறிக் கொண்டே, விண்ணப்பித்தமைக்கான ஆதாரங்களைப் பெற்று அவற்றை ஒரு வரி விடாமல் சரி பார்த்தார்.
கவலைப்படாதீர்கள். நான் அதிகாரிகளை சந்தித்து சரி செய்கிறேன் என்றவர், நீங்கள் இன்றே புறப்பட வேண்டுமா? இரண்டு நாட்கள் தங்கி இருந்து
இன்ன பிற மாவட்டங்களிலிருந்து வரவிருக்கக் கூடிய விடுபட்டுப் போன ஆசிரியர்களின் பெயர்களை சரி பார்க்கும் பணியில் தம்முடன் ஈடு பட முடியுமா ? எனக் கேட்டார் .
மறு பேச்சின்றி சம்மதித்தோம்.
இரவு விருந்துண்ண ஒரு விருந்துக்கு எங்களையும் அழைத்துச் சென்றார்.
இரவு அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளுங்கள் நம் நலனுக்காகத்தான் இந்த அலுவலகம் என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.
இரண்டு நாட்களும் அவருடன் பழகி பேச எமக்கு கிடைத்தது சிறந்த வாய்ப்பு என்றும் , சங்கத்தினுடைய கட்டுக் கோப்பான செயல்பாடுகளை நேரில் கிடைத்த வாய்ப்பாகவும் நான் கருதுகிறேன்.
சங்கத்தினுடைய செயல் வீரர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் திரு தாமோதரன், திரு.ரமேஷ், திரு.மணிகண்டன் இன்னும் நிறைய பேர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்கள்.
இரண்டு நாட்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்களும் ஆண் ஆசிரியர்களும், பெண் ஆசிரியர்களும் தங்கள் பெயர்களும் பிறர் பெயர்களும் விடுபட்டுப் போய்விட்டதை முறையிட்டார்கள். நம்மாநிலத் தலைவர் அவர்கள் அனைவருக்கும் இன் முகத்தோடு பதிலளித்து ஆறுதல் கூறி முறையான விண்ணப்பங்களை சிரத்தை எடுத்து சரி பார்த்து, சரியான விண்ணப்பங்களை மட்டும் சேர்க்க முயற்சிப்பதாக உறுதி அளித்ததும், அருகிலிருக்கும் அவரது மூன்று செல் பேசிகளும் மாறி மாறி ஒலித்த போதும் எடுத்து கனிவோடு பதிலளித்ததும் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது வியக்க வைக்கும் நினைவுத்திறன்!
ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் வரும்போதும், எந்த மாவட்டத்திலிருந்து எவ்வளவு உறுப்பினர் சந்தா, ஆயுள் சந்தா, நாட் குறிப்பிற்கான தொகை வந்திருக்கிறது வர வேண்டி இருக்கிறது என்றும் எந்த குறிப்பினையும் பார்க்காமல் புன்முறுவலோடு சொன்னவிதம், அவரது தலைமைப் பண்புக்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த கலந்தாய்வு நெருங்க நெருங்க அவருக்கு உரக்கமேன்பதே இல்லாமல் போனது என்பதை அவர் அருகிலிருந்து பார்த்தவர்கள் நன்குணர்வார்கள்.
உணவும், நீரும் கூட அருந்தாமல் தொடர்ச்சியாக பணிபுரிவது அதுவும் தன்னலமின்றி தன் சக ஆசிரியருக்காக மட்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நானே ஒரு நாள் பரிதாபப் பட்டு என்று சொல்லக் கூடாது- என் சக ஆசிரியர்களின் நலனுக்காக உழைக்கும் ஒரு உன்னத தலைவன் உடலால் சோர்ந்து போய்விடாது இருக்க வேண்டும் என்பதற்காக தேநீர் கடையை தேடிச் சென்று தேநீரும் குடிக்க நீரும் வாங்கி வந்து வழங்கினேன்.
அவரது கண்கள் அவ்வப் பொழுது உண்மையான நேர்மையான உள்ளங்களைத் தேடி அலைகின்றன. எல்லோரையும் அவர் அரவணைத்துச் சென்றாலும் அன்போடு நடந்து கொண்டாலும், பொறுப்பாளர்களின் நடவடிக்கையை பிறரிடம் பேசிக்கொண்டே உன்னிப்பாக கவனிக்கிறார். சிறிது தவறு செய்தாலும் உரிமையோடு கடிந்து கொள்கிறார். அவரது நடவடிக்கைகள் வெளிப்படயானதாகவே இருக்கின்றன.
பிற சங்கத்தை சேர்ந்த ஆசிரியாரானாலும் அவரும் ஆசிரியர் தான் என்றும், எந்த ஆசிரியரின் நலனும் துளியும் பாதிக்கப் படக் கூடாது என்பதில் முழு அக்கறை உள்ளவராகவும் நம் தலைவர் இருக்கிறார்.
இப்பொழுது நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குள்ளாக நமது தலைவர் அவர்கள் ஆசிரியர் நலனில் அக்கறை கொள்ளும் தலைவர்களில் ஒரு சிறந்த தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பது இந்த அடியேனின் கணிப்பு.
அவரை நேரில் கண்டு பழகி பேசி வந்ததிலிருந்து வான் புகழ் வள்ளுவனின் குறளொன்று என் ஆழ் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகழ்வெல்லல் யார்க்கும் அரிது. "
- இக கட்டுரையை முழுதாய் படித்து முடித்தபின் உங்களுக்குள்ளும் அசரீரியாய் இந்தக் குறள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
-தஞ்சையிலிருந்து, புகழ். ஜெயபிரபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக