சனி, 19 ஜனவரி, 2013

பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள் SSA நடத்துகிறது


பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே கலை, இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள், ஒன்றிய, மாவட்ட அளவிலும் இந்தப் போட்டிகளை அவர்கள் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களிடம் பன்முகத் திறனை வளர்க்கவும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,2 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டியும், 3,4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, குழுப்பாடல்கள், நடிப்பு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட வேண்டும். 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இவற்றோடு பேச்சுப்போட்டி, விநாடி-வினா, ஓவியப் போட்டியும் நடத்தப்பட வேண்டும். 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விநாடி-வினா போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவிலான போட்டிகள் ஜனவரி 21 முதல் 25 வரையிலும், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஜனவரி 28 முதல் 30 வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி 2 முதல் 6 வரையிலும் நடத்தப்பட வேண்டும். ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு பேர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி 12 முதல் 16 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்