திங்கள், 30 ஜூலை, 2012

ஓராண்டு பட்டம் செல்லாது - விளக்கம்

ஒரே ஆண்டில் 18 பாடங்களில் தேர்வு எழுதி பெற்ற பட்டப்படிப்புகள், பதவி உயர்வுக்கு செல்லாது என்ற பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற, மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். சீனியாரிட்டி, காலியிடங்களை பொருத்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். 
ஆசிரியர்கள் பலர் பதவி உயர்வுக்காக, மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை, ஒரே ஆண்டில் 18 தாள்களையும் எழுதி தேர்ச்சி பெறுகின்றனர். 

தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்கள் இந்த வசதியை வழங்கி வருகின்றன. ஆனால், 10+2+3 என்ற அடிப்படையில் படிப்பை பூர்த்தி செய்வோருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. இதற்கிடையே, ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த ஆசிரியர்களையும் சென்னையில் இன்று நடக்கும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அழைப்புக்கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது என்றும், அதுபோன்ற பட்டப்படிப்பை பெற்றவர்கள் பதவி உயர்வு பெற தகுதி இல்லாதவர்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீரென்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஒரே ஆண்டில் 18 தாள்களையும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, பிளஸ் 2 முடித்தவுடன் மூன்றாண்டு முறையான பட்டப்படிப்பு, பி.எட்., கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கு தகுதி பெறுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனுக்குடன் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 20 ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்