வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 100 சதவீதத்தை அடைந்துள்ளதால், இது தொடர்பான பரிந்துரையை ஏழாவது ஊதியக் குழுவுக்கு அனுப்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்‌யப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகள் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

தற்போது அகவிலைப்படி 100 சதவீதத்தை அடைந்துள்ளதால், இது தொடர்பான பரிந்துரையை ஏழாவது ஊதியக் குழுவுக்கு அனுப்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்‌யப்பட்டது. இதன்மூலம், ஏழாவது ஊதியக் குழு தனது இடைக்கால அறிக்கையில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்ய முடியும். அவ்வாறு இணைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 30 சதவிகிதம் உயரும்.
 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும்.

வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. 

தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும்.

106 கோடி மதிப்புள்ள பள்ளிக் கல்வித்துறை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

பள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தரமான கல்வி அளிப்பதோடு, படிக்கும் சூழலை மேம்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், மாத்தூரில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 109 அரசு பள்ளிகளில் 97 கோடியே 64 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள்;

மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட நூலகத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப்பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு;

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியினை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகம்;

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ள கல்வி வளாகம், என 102 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள், நூலகக் கட்டிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டக்கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்ற கருத்துடன் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு மடிக்கணினியை வழங்கினார். பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியருக்கு 19 ஆயிரத்து 200 ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு பரிசுத்தொகையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறக்க நேரிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால், அவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அக்குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச்செலவு, பராமரிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நிரந்தர வைப்பு நிதியாக வழங்கும் திட்டத்தை ஏற்கனவே முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருந்தார்.

அதன்படி, 2011–12 மற்றும் 2012–13–ம் கல்வி ஆண்டுகளில் மொத்தம் 720 மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாயை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

2013–14–ம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதன் அடையாளமாக ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான பத்திரத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக ஒருவருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் புதிய திட்டத்தைத் தொடக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக ஆயிரத்து 600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டிடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

ஆக, மொத்தம் பள்ளிக் கல்வித்துறையில், 106 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக் கட்டிடங்கள், நூலகங்கள், கல்வி அலுவலகம், கல்வி வளாகக்கட்டிடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி, பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை துவக்கி, ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டிடத்தை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு

தேர்வுத்துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல் ரோல்" வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த செய்முறை தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் அதற்கு முன் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல் செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது.
தேர்வுத்துறை, "நாமினல் ரோல்" வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் பதிவு எண் மற்றும் "ஹால் டிக்கெட்" வழங்க முடியாத சூழல் உருவாகியது. இதையடுத்து 10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று மாலை, தேர்வுத்துறை  இயக்குனர் அறிவித்துள்ளார் . 

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

 உயிரியல், புவியியல், ஹோம் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் கிரேடு -1 பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடத்தப்பட்டது.


போட்டித் தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இந்த 4 பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


 உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SGT TO BT PROMOTION | 01.01.2013 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வு ஆணை பெற்றவர்கள் அடுத்த வேலை நாளில் கண்டிப்பாக பணியில் சேரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் 179ஆங்கிலம் 82 ,  கணிதம் 87அறிவியல் 65 ,சமூக அறிவியல் 85  பதவி உயர்வு வழங்கப்படுவோர் எண்ணிக்கை மொத்தம் 498

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

உண்ணாவிரதம் அரசின் கவனத்தை ஈர்க்கும்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்கள் பங்கேற்ற "2014 பிப்ரவரி 9 "
உண்ணாவிரதம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகுந்த எழுச்சியோடும் உத்வேகத்துடனும் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.

இது குறுகிய நாட்களில் திட்டமிடப்பட்டு அசுர வேகத்தில் செயற்பட்ட மாநில மாவட்ட  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சங்க உணர்வாளர்களால் சாத்தியமானது என்பதை மாநில மையம் நன்றியோடு பார்க்கிறது.

இந்த உண்ணாவிரதத்தில் தமிழக முதல்வரை ஈர்க்கும் வண்ணம் பலரும் அவரின் புகழ்பாடினர் இது முதல்வரை நெகிழச்செய்யும் என்றாலும் தொகுப்பூதிய முறையை ஒழித்து  55000 ஆசிரியர் குடும்பங்களில் ஒளியேற்றிய அந்நாளைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையும் அவர் ஆசிரிய சமூகத்திற்கு அளித்துள்ள அத்துணை சலுகைகளையும் நன்றியோடு பார்க்கிறோம்.

     எமது அடிப்படைக் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்

 தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக கருதி பணப்பலனுடன் கூடிய அரசாணையை வெளியிட வேண்டுதல்

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பதவி உயர்வு வாய்ப்பில்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் 50%
 பதவி உயர்வு பணியிடங்களாக  மாற்றி நடவடிக்கை வேண்டுதல்.
 
ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல்.
 
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டுதல்

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வேண்டுதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ள நாம் இன்னும் ஒரு சில நாட்களில் நேர்மறை தகவல்களை எதிர்நோக்கி
இருக்கிறோம்.



திங்கள், 3 பிப்ரவரி, 2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட வேண்டுதல் தொடக்ககல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி நியமன முதுகலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து ஐம்பது சதவீத பணியிடங்களை பதவியுயர்வு மூலம் வழங்க வேண்டுதல் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம்

வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவிருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க தமது பங்களிப்பை உறுதிசெய்வதன் மூலம் நமது பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ரத்து உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்நோக்கலாம்.
     அனைத்து மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய கடும் முயற்சி மேற்கொண்டு திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ளவதை உறுதி செய்ய வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்
                     இந்த       உண்ணாவிரத்திற்கு    அனைத்து    வகை   ஒப்பந்த ஆசிரியர்  களையும் முதுகலை ஆசிரியர்களையும் இடைநிலை ஆசிரியர்களையும் சிறப்பாசிரியர்களையும் கலந்து கொள்ள வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது . 
                                 -------வெற்றி நமதே---------

பிரபலமான இடுகைகள்