சனி, 28 மார்ச், 2015

சமூகத்தின் திறவுகோல் அரசுப்பள்ளி...! இதனை பலப்படுத்தி சமூகத்தை வளப்படுத்துவோம்..!!

சமூக ஏற்றத்தாழ்வுகள்  அது சார்ந்த  போராட்டங்கள் மாநிலம் முழுக்க தலைவிரித்தாடியபோது  எல்லோரும் சமமாக அமர்ந்து படிப்பதை உறுதி செய்து சமூக ஏற்றத்தாழ்வை  ஓரளவு மட்டுப்படுத்தியதில் காமராசர் காலத்து தொடக்கப்பள்ளிகளுக்கு பெரும் பங்கு உண்டு   இந்த காலகட்டத்தில்  ஆண்டான்  பிள்ளைகளும் அடிமைகளின்  பிள்ளைகளும் ஒன்றாய் அமர்ந்து  கல்விகற்கும் சூழலை உருவாக்கியதே   அக்காலத்தைய அரசுப்பள்ளிகளின்  சமூக புரட்சி என்றே சொல்ல வேண்டும்.தற்கால பகட்டு வாழ்க்கையில்   அதே சமூகப்பணியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதில் முனைப்பு காட்டி வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

இது போன்று சமூகத்தோடும் அதன் ஒவ்வொரு நகர்விலும் இத்தகைய  பள்ளிகள் தவிர்க்க முடியாத வரலாற்றை தன்னகத்தே தாங்கிக்கொண்டு நிற்கிறது

சரி அதெல்லாம் விடுங்க கட்டிடம் ஒழுங்கா இல்ல....கோச்சிங்  சரியில்லை....ரிசல்ட் புல்லா வரல.....சென்டம் கம்மியா வந்திருக்கு.....இங்கே மெடிக்கல் போறவங்க கம்மி.....என்றெல்லாம்  புலம்பும் நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்

நீங்க சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனால் நீங்களே மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கள் உங்க பிள்ளைக்கு அடிப்படை பாட அறிவு இருக்கா....? பொதுவான அடிப்படைக்கொள்கைகளை ஏனைய நடைமுறை வாழ்வியலோடு ஒப்புமை செய்யும் திறன் வளர்ந்திருக்கிறதா...? உங்களை  மதிக்கிற பழக்கம் அல்லது உங்களது கருத்தை ஏற்கிற பக்குவம் இருக்கிறதா? தங்களது குடும்ப நிலையை உணர்ந்து செயலாற்றுகிறானா? சக நண்பர்களோடும் உறவினர்களோடும் அன்பு பாராட்டுகிறானா..?
நீங்க சொல்லும் பதிலை நீங்களே ஆய்வு செய்யுங்கள்..!
இதற்கெல்லாம்  காரணம் என்னவென்று யோசிங்க..!

நமது கோரிக்கையான ஏதேனும் ஒரு படிப்பை படிக்க வலியுறுத்தி அந்த மாணவன் மீது கட்டவிழ்க்கப்படும் படி படி படி  வன்முறைதான்.....பாடத்தையே புரியாமல் படிக்க கட்டாயப்படுத்துவதும்........சோதனையைச் செய்யாமல் செய்முறை தேர்வுகளில் முழுமதிப்பெண்ணும் கிடைத்துவிட பிறகெதற்கு  புரிதல்....என்கிற  அசட்டைத்தனம் இவர்களை  சுயசார்பற்றவர்களாக மாற்றிவிடுவதோடு....ஐ ஐ டி போன்ற  உயர்கல்வி நிலையங்களில் இடமே கிடைக்காமல் போய்விடுகிறது...அப்படியே கிடைத்தாலும் மிகவும் சிரமத்துடன் கற்கும் சூழல் இருப்பதற்கு  மேற்கண்ட அசட்டைத்தனமே  காரணம்.....என்பதை உணர்வோம்...

சரி இதற்கும் அரசுப்பள்ளியில்  பிள்ளைகளை சேர்ப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்....அரசுப்பள்ளிகளிலும் ரிசல்ட் சுரம் அடித்தாலும் சோதனைகள் மூலம்  சுதந்திரக்கற்றலும்...... கேள்விகளுக்கு பதிலும்..... இயல்பாய் இருக்கும் சாமானியர்களின் வாழ்க்கை நிலையும்....பொருளாதார முக்கியத்துவங்களும்...இங்கே போதிக்கப்படுவதில்லை என்றாலும் கண்டு உணரும் களமாக இருக்கிறது என்பதை உணருங்கள்....இங்கே பயிலும் மாணவர்கள் போட்டித்தேர்வுகளில்  அதிகம் வெல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்....

சமூகத்தின் நல்ல குடிமகனாய்
 நம் பிள்ளைகள்  திகழ
அரசுப்பள்ளியில் சேர்ப்போம்.....
சமூகத்தை காப்போம்......
படம் : ஆனந்த விகடன் 

வெள்ளி, 27 மார்ச், 2015

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க வலியுறுத்துகிறோம்.....

 பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை  வழக்கம் போல தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க வலியுறுத்துகிறோம்.....மாறாக ஏப்ரல் இருபது தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்தும்பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கும் பட்சத்தில் இப்பணி  மேமாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது  இதனால்   பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக  தொடர் பயிற்சி , சிறப்பு வகுப்பு என்று குடும்பம் குழந்தைகளை மறந்து முழுத்திறனோடு  தொடர்ந்து  உழைத்திட்ட ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையிலாவது தனது  குடும்பம் குழந்தைகளோடு மன அழுத்தமின்றி நிம்மதியாக இருந்திடும் வகையில்  விடைத்தாள் திருத்தும் பணியை இடைநிலைக்கல்வி  பொதுத்தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க அரசை வலியுறுத்துகிறோம்......

சனி, 14 மார்ச், 2015

அரசுப்பள்ளியை காப்போம்...!

தமிழகத்தில்  இன்று அரசுப்பள்ளிகள்  தங்களை  நிலை நாட்டிக்கொள்ள  போராட வேண்டியுள்ளது ஆனால்  தனியார்  பள்ளிகளின் கவர்ச்சிமிகு விளம்பரங்களை கண்டு கனியாத  பெற்றோரே இல்லை எனலாம்...! சிறப்பான பயிற்சி ...மாநிலத்தில்  முதலிடம் ...!! கணினி.... யோகா.... நாட்டியம்..... கராத்தே.....என்று தங்களால்  இயலாதவற்றை   தம் பிள்ளைகள் மூலம் சாதிக்க வேண்டும் என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு ஆபத்தாண்டவனாய்  கண் முன்னே தெரிபவை பிரமாண்ட கட்டிடங்களும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறையும் அட்மிஷன் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் கொட்டைக்கூழ் காபியும் தான்....

படிச்சா இங்கேதான் படிக்கணும் ஏம்புள்ளைய எம்புட்டு சிரமப்பட்டாலும் இங்கேதான் சேக்கணும்...சில லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை என்று நடுத்தர குடும்ப பெற்றோரே முடிவெடுக்கும் போது பணக்கார அப்பாக்களும் அம்மாக்களும் ஆன் தி ஸ்பாட் அட்மிஷனையே விரும்புகின்றனர்......

காலையில் ஏழுமணிக்கெல்லாம் வேன் வந்துரும் ....ஷூ  லேச ஒழுங்கா  கட்டி  வுடணும் இல்லன்னா  புள்ளைக்கி பைன் போட்ருவாங்க ....ஏம்புள்ள பேசற இங்லீஸ் அவுங்க அப்பாவுக்கே தெரியல.....என்று அம்மாக்கள் பக்கத்துக்கு வீட்டில் அங்கலாய்க்கவும்  உறவினர்கள்  மத்தியிலும் ஊரார்  மத்தியிலும் பெருமை பேசவும்  ஒரு கூடுதல் பலம்.....

இது இப்படியிருக்க அரசாங்க பள்ளியில் படிக்கிற பசங்களோட பெற்றோர் எந்த அக்கறையையும் காட்டாமல்  ஏனோ தானோவென்று இருப்பதோடு தம் பிள்ளையின் கிழிந்த சட்டையையும்  பொத்தானையும் தச்சு கொடுக்கக்கூட நேரமின்றி வயல்களிலும் கட்டுமான பணிகளிலும் சாலை சீரமைப்பு பணியிலும்  பக்கத்து மாவட்டக்கரும்புவெட்டு  கூலியாகவும் உழைத்து உழைத்து ஓடாகிக்கொண்டே  இருக்கிறார்கள் என்பது அரசுப்பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை இன்மைக்கும் சுய மதிப்பு தாழ்ச்சிக்கும் இடமளித்துவிடுகிறது....

அரசுப்பள்ளியில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளும் விலையில்லா எழுது பொருட்களும் காலணியும் பலவகை உணவும் மிதிவண்டியும் மடிக்கணினியும் ஒருவித பொருள் சார் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பெற்றோர்களின் மனதில்  நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற மனப்போக்கை வளர்த்துவிட்டுள்ளதோடு
பெற்றோர் மகன் மகள் உறவில் விரிசலையும் உருவாக்கி நீங்க என்ன செஞ்சீங்க.....என்று பிள்ளைகள் பதில் கேட்க வைத்துள்ளது.....

இது இப்படியிருக்க பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களுக்கு  வழங்கப்படும் தொடர் பயிற்சிகளால் மனம் உடைந்து பள்ளிக்கு பாதியிலேயே முழுக்குப்போடவே விரும்புகின்றனர் .  நூறு சதவீத தேர்ச்சியே குறிக்கோள் என்று செயற்படும் தனியார் பள்ளிகளின் போட்டி வலையில் சிக்கியுள்ள அரசுப்பள்ளிகளுக்கு முழுத்தேர்ச்சி முழுச்சவலாய் உள்ளதோடு அலுவலர்களின் நெருக்கடி மூச்சு முட்ட வைத்து விடுகிறது.....எனினும் பல்வேறு சமூக பொருளாதார நெருக்கடிகளையும் மீறி சாதிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் சமூக அக்கறையுள்ளவர்களாக  வருகிறார்கள் என்பதுதான் கூடுதல் நம்பிக்கை.

தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் ஒற்றை இலக்கத்தில் இயங்குவதாக புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன. இப்பள்ளியில் பயில வேண்டிய  மாணவர்கள் அருகாமை தனியார் பள்ளிகளில் அடகுவைக்கப்பட்டு விடுகின்றனர் என்பதுதான் வேதனை...சரி நுனி நாக்கில் இங்க்லீஸ் .. டை ஷூ....இதெல்லாம் இங்கே உண்டா...?  என்று கேட்பவர்கள்  நம்மூரு பள்ளிக்குள் ஒருமுறை கூட சென்று பார்க்கவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம் ......தற்போது அனைத்துவகை தொடக்கப்பள்ளிகளிலும் மேற்சொன்ன அனைத்து பயிற்சிகளும்  முறையாக பயிற்றுவிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.....

நம்மூரு வெப்பநிலைக்கு ஷூவும் ....டையும்.....தேவையா...? என்பதை சிந்திக்க வேண்டும்....நீட்னஸ் பத்தாது என்று சொல்பவர்கள் தினமும் பள்ளிகளில் வழங்கும் உடற்பராமரிப்பு பயிற்சியை பார்க்க வேண்டும்....இதுமட்டுமின்றி தாய்மொழியை பிழையில்லாமல் உச்சரிக்கவும் ஆங்கிலத்தை அடிப்படையோடு சொல்லிக்கொடுப்பதிலும் அரசுப்பள்ளிகள்  அசரவைக்கின்றன....

தன் பிள்ளையை பள்ளி  வாகனத்தில் அனுப்பி  டாட்டா  காட்ட நினைப்பவர்கள்.......கும்பலாய் பிதுங்கிக்கொண்டு செல்லும் தானிகளில் அனுப்பவதற்கு பதிலாக  தனி தானியில்(ஆட்டோ) பெருமையாக  அனுப்பலாமே ....

சிந்திப்போம் அரசுப்பள்ளியில் சேர்ப்போம்...!

வியாழன், 12 மார்ச், 2015

பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் அருகாமைப்பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத ஏதுவாக பயணசீட்டு அனுமதி அட்டையை பயன்படுத்திட கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் வேண்டுகோள்


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு. தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுத அருகாமைப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது இதனால் பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற பள்ளி  மாணவர்கள் தினசரி சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் உள்ளது இந்நிலையில் வருகிற மார்ச்  19 ந்தேதி தொடங்க விருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக அரசுப்பேருந்துகளில் அருகாமைப்பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத ஏதுவாக பயணசீட்டு அனுமதி அட்டையை பயன்படுத்தி கட்டண தவிர்ப்பு பெற்றிடும் வகையில் பொது அறிவிக்கை வெளியிட்டு  கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு மாணவர்களின் வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி வேலை நேரங்களில் உரிய முக்கியத்துவமின்றி  கணக்கு தொடங்க தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது இதனைக் கருத்திற்கொண்டு அருகாமை வங்கிக்கிளைகள் மூலம்  ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு முகாம் அமைத்து வங்கி கணக்கு தொடங்க வழிவகை செய்யவும் மேலும் மாணவர் வங்கிக்கணக்குகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திட வங்கிகளை  பள்ளிக்கல்வித்துறை  கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது 

சனி, 7 மார்ச், 2015

மார்ச்சு எட்டு - ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் வரலாற்று நாளாகட்டும்....!

மாநிலம் முழுதும் தோழமை இயக்கங்களோடு கரம் கோர்த்து ஆசிரியர்  இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்  குழுவில் இடம் பெற்றுள்ள நாம்  நமது முழுத்திறனையும் பயன் படுத்தி ஆசிரியர்களை ஆர்ப்பாட்டக்களத்திற்கு அழைத்து வந்து அரசின் கவனத்தை ஈர்ப்போம்...!
சிறு சிறு அவமதிப்புகளை  பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாய் இருப்போம்...!!
போராட்டம் ஆர்ப்பாட்டம் நமக்கொன்றும் புதிதல்ல...!!! என்பதை உணர்ந்து வீரியமுடன் களம் காண்போம்!!!!
வெற்றி நமதே!
புறப்படுவோம்...... போராடுவோம்.....
  

பிரபலமான இடுகைகள்