வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக அதிகரித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து, அதற்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஏனைய திட்டங்களுடன் மாநில அரசின் 10-ம் வகுப்புக்கு மேற்பட்ட படிப்புக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கென அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம்  நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தவும், நடப்புக் கல்வியாண்டு முதலே இதனை நடைமுறைப்படுத்தவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.34.83 லட்சம் செலவு ஏற்படும்.

நரிக் குறவர்கள் என்கிற குருவிக்காரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினரைப் போன்று உள்ளதைக் கருத்தில் கொண்டு நரிக் குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பணியை பாதிக்கும் "விலையில்லா' கல்வி உதவிகள்



மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்காக, நிதிநிலை அறிக்கையிலும்கூட மூன்றில் ஒரு பங்கு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.
இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையில்லா கல்வி உதவிகளால் பள்ளிகளில் கற்பித்தல், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
வழக்கமாக, மே, ஜூன் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் குறைந்தது 100 முதல் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே "ஆன்-லைனில்' பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களை அளிக்கும் பணியை பள்ளி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இம்மாணவர்களுக்கு சாதி, வருமான, இருப்பிடச் சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து பெற்றுத்தரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்காக விலையில்லாமல் வழங்கப்படும் பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப் பை, சீருடைகள், காலணிகள், பஸ் பயண அட்டை, சைக்கிள்கள், வண்ணப் பென்சில்கள், கணிதக் கருவிப் பெட்டி, புவியியல் வரைபட நூல், இடைநிற்றலைத் தடுப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி, செஸ் விளையாட்டுக் கருவிகள், மதிய உணவு உள்ளிட்டவற்றைத் தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் பெற்றுத்தருவதை தலைமை ஆசிரியர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக சில மாதங்கள் சாதி வாரியாகப் பட்டியல் தயாரித்து, அரசுத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும். அரசுத் துறைகளிடமிருந்து பகுதிவாரியாகக் கிடைக்கும் நலத் திட்டங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்.
சீருடைகள், காலணிகள் போன்றவற்றை மாணவர்களிடம் அளவெடுக்கும் பணியையும் பள்ளி நிர்வாகங்களே மேற்கொள்ள நேரிடுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பீடித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களில் இருந்து உதவித் தொகைகளைப் பெற்றுத் தருதலும் பள்ளி நிர்வாகங்களின் பணியாகும்.
இந்த உதவித்தொகைகள் அனைத்தும் மாணவர்களுக்குக் காசோலையாக வழங்கப்படுகிறது. இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கும் பணியையும் கவனிக்க வேண்டும்.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள், இரவு மற்றும் பகல் நேரக் காவலாளிகள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. பற்றாக்குறை இருக்கும் நிலையில், மேற்கண்ட விலையில்லா திட்டங்களுக்கான தயாரிப்புப் பணிகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களே மேற்கொள்ள நேரிடுகிறது. இதனால், கற்பித்தல் பணியில் தேக்கம் ஏற்படுகிறது.
இப்பணிகளோடு, வழக்கமான பள்ளி நிர்வாகப் பணி, கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டங்கள், அரசின் அவ்வப்போது அறிவுப்புக்கிணங்க பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள நேரிடுவதால், தலைமை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
விலையில்லா திட்டங்களின் பணிகளுக்காக வேலைவாய்ப்பு, வட்டாட்சியர், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்கிறது.
சத்துணவுத் திட்டத்துக்கென பள்ளிகளில் அமைப்பாளர்கள் உண்டு; இதேபோல், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுக்குத் தனித் தனியே திட்ட அலுவலர்களைப் பள்ளிக் கல்வித்துறை நியமிக்கிறது.
இவ்வாறாக விலையில்லா பொருள்கள், நலத் திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்க, தனியே திட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை குறையும்.

தி. நந்தகுமார்
நன்றி - தினமணி

ஆசிரியர் தகுதித்தேர்வு உணர்த்தும் உண்மைகள்

வீ. தமிழன்பன்
 அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையின் மூலம் சில கற்பிதங்களையும், சில உண்மைகளையும், எதிர்காலத்தில் இத்தேர்வில் செய்யவேண்டிய மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 இரண்டாயிரம் பேரைத் தவிர, தேர்ச்சி பெற முடியாமல்போன அனைவருமே "தகுதியற்றவர்கள்' என நாம் ஒட்டுமொத்தமாகக் கருதிவிட முடியாது.
 முதலில், தேர்வு அறிவிக்கப்பட்ட நாளுக்கும் தேர்வு நடைபெற்ற நாளுக்கும் இடையில் போதிய கால அவகாசம் இல்லை. பெரும்பாலானோர் இந்தத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தனர்.
 தகுதித் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அளவிற்கேற்ப அதற்குத் தயார்படுத்திக் கொள்வதற்கு அவகாசம் இல்லை.
 முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஒரே காலகட்டத்தில் போட்டித் தேர்வையும், தகுதித் தேர்வையும் (டிஇடி) எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 இரண்டிற்குமான கால அவகாசம் பெரும்பாலானோர் கேட்டுக் கொண்ட பின்னரே (அதுவும் போட்டித்தேர்வு முடிந்த பிறகு) சற்று நீட்டிக்கப்பட்டாலும் அது போதாது என்பதே பலரது கருத்து.
 இரண்டிற்குமான தேர்வு பாடத்திட்டம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
 அதனால் இரு தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலையில் இருந்தவர்கள் எந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்று முடிவெடுப்பதே பெரும் சவாலாக இருந்தது.
 சமூகப்பொறுப்பு சார்ந்த ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பா, தேர்வு முறையா என்பதில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் ஒவ்வொரு முடிவு எடுக்கப்பட்டு வருவதால், தேர்வுக்குத் தயாரான மன நிலையில் பெரும்பாலோர் இல்லை. பலர் பல்வேறு பயிற்சி நிறுவனங்களை நம்பி ஏமாந்தனர்.
 கடந்த காலங்களில் ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு அவை எந்த அளவுக்குத் தரமான கல்வியைத் தந்தன எனக் கண்காணிக்காமல் விட்டதன் நிலைதான் தகுதித் தேர்வு என்ற ஒரு தேர்வை நடத்த வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
 பல தேர்வுக் கூடங்களில் தேர்வு நேரம் தொடங்கிய பிறகு நேர மேலாண்மையைப் பாதிக்கும் வகையில் தேர்வர்களிடம் கையொப்பம் வாங்குவது, தேர்வர்களின் சிந்தனையைத் திசை திருப்பும் வகையில் தேர்வு நேரம் தொடங்கிய சில நிமிடங்களுக்கும் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவும் தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது போன்ற நிகழ்வுகளும் நடந்ததால் சில வினாக்களைத் தவற விட்டோம் என்றும் சிலர் தெரிவித்தனர்.
 தேர்வுக்கான வினாக்கள் பெரும்பாலும் பாடங்களின் ஆழமான நிலைக்குச் சென்று அதிலிருந்து கேட்கப்பட்டிருந்தன. ஆனால், ஆசிரியர் தேர்வாணைய அதிகாரிகள் பங்கேற்ற ஒரு டி.வி. நிகழ்ச்சியில், "ஆசிரியராக வரக்கூடிய ஒருவருக்கு அடிப்படையாக சில தகுதிகள் இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் வகையிலேயே மேலோட்டமாக, சாதாரணமாகத்தான் வினாக்கள் இருக்கும். பெரிதாகப் பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை' என்று கூறினார்கள்.
 ஆசிரியருக்கான தகுதியைச் சோதிக்கும் வகையிலான தேர்வில் வினாக்களும் அவர்கள் தகுதியைச் சோதிக்கும் வகையில் பொதுப்படையாக அமைக்கப்பட வேண்டும்.
 அதன் மூலம் அவர் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவார், எப்படிப் பாடங்களைக் கற்பிப்பார், என்ன மாதிரியான உளவியலைப் பயன்படுத்துவார், எப்படிப்பட்ட பண்பு நலன்கள் ஆசிரியரிடம் இருக்க வேண்டும் என்பன போன்றவற்றை அறிகின்ற வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டால்தான், அதைத் தகுதித் தேர்வு என அழைக்க முடியும்.
 மாறாக போட்டித் தேர்வுகளுக்குக் கேட்கப்படுவது போன்றே ஒரு பாடத்தைப் படித்து நினைவில் நிறுத்தி, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதிலளிப்பது போன்றே அமையுமானால் அதைப் போட்டித்தேர்வு என்றே அழைத்து விடலாம்.
 ஆசிரியர் பணிக்கான படிப்புகளை சில ஆண்டுகளுக்கு முன்னரே படித்து முடித்துவிட்டு, பணி கிடைக்கும் வரை வேறு வேலைகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும், பாடங்களுடன் சற்று தொடர்பு விடுபட்டிருக்கும் நிலையிலும் உள்ளவர்களுக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு தேர்வுக்கான போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது.
 கல்வியியல் கல்லூரிகளில் பள்ளிகளில் உள்ள பாடங்கள் சொல்லித் தரப்படுவதில்லை. கற்பித்தல் முறைகள், உளவியல் முறைகள், மாணவர்களைக் கையாளும் முறைகள், ஆசிரியருக்கான தகுதிகள் போன்ற வகையிலான பாடத் திட்டங்களே அமைக்கப்பட்டுள்ளன.
 ஆகையால் தகுதித்தேர்வுக்கான வினாக்களும் ஆசிரியரின் பண்பு நலன்களை, தகுதியை வெளிக் கொண்டுவரும் வகையிலும், கூடவே பாடம் சார்ந்த வினாக்களும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் விரிவாக விடையளிக்கும் அமைப்பில்கூட வினாக்களை அமைக்கலாம்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு கால அட்டவணைப்படி அக்டோபரில் நடக்கும் என அறிவிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது


.தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில்     அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.  

மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.

 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகியுள்ளனர். 17 உடல் ஊனமுற்றோர்களும், 2 கண் பார்வை இல்லாதவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை வழங்கப்படும். தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். இவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.




ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகம் பேர் 60 மதிப்பெண்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்று எங்களுக்கும் 35 சதவீதம் எடுத்தால் ‘பாஸ்‘ என்று அறிவிக்க வேண்டும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி ஷோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஏ.பிருந்தா, சித்ரா இருவரும் 124 மதிப்பெண் பெற்று 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில்கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்ரா 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஷர்மிளா 131 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆர்.பிருந்தாதேவி 117 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் 3 இடங்களையும் 9 பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 3ம் தேதி பள்ளிக்கு விடுமுறை

ஆசிரியர் தகுதி தேர்வில் பெயிலான 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி (செவ்வாய்) காந்தி ஜெயந்தி அன்றும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியாகியது

முடிவுகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் பார்க்கவும்.....http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

359 சிறந்த ஆசிரியர் விருதுக்கு 1,000 பேர் போட்டி


இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது.ஆசிரியர் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, ஜனாதிபதி ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரின் பிறந்த நாளான செப்.,5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.மத்திய அரசு விருதுமிகச் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தேசிய அளவிலும், அந்தந்த மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. மத்திய அரசின் விருது, ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கான ஆசிரியர் பட்டியலை, ஓரிரு நாளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட உள்ளது.
மாநில அரசு விருது
மாநில அரசு சார்பில், 359 ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் என, பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
அதன்படி, 2,000த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், கல்வி மாவட்டங்களில் பெறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர்
சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும், என்றார்.
தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.
thanks dinamalar

21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு






 நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, 21ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும், என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார்.
அவரது அறிவிப்பு: ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வருக்கான மதிப்பெண் சான்றிதழ், அவர்களின் முகவரிக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர், தங்களது இருப்பிட முகவரிக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ள, 27ம் தேதிக்குள், பெயரை பதிவு செய்ய வேண்டும். அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வர், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
செய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவத்தை, தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு இயக்குனர் தெரிவித்தார்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எஸ்சி., எஸ்டி., மாணவர்களுக்கு யூஜிசி வழங்கும் கல்வி உதவித்தொகை



                  பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.,) முதுகலை பட்டப்படிப்பை படிக்கும் எஸ்சி, எஸ்டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.



இத்திட்டமானது 1000 எஸ்சி, எஸ்டி., பிரிவை சார்ந்த  மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் கல்வித்தகுதியாக, அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், தொழிற்கல்வியான (பொறியில், தொழில்நுட்பம், மேலாண்மை, பார்மசி), போன்ற படிப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

 தொலைநிலை கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற இயலாது.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 45 வயதிற்குள்ளும், பெண்கள் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 



மேலும் விரிவான தகவல்கள் அறிய http://www.ugc.ac.in/oldpdf/xplanpdf/PGScholarshipprofessionalcourse.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

முதல்வரின் சுதந்திர தின உரை


 சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முழுமையான வடிவம்:




66-ஆவதுசுதந்திர தின நன்னாளில் பன்னிரண்டாவது முறையாக இந்தக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
65 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டி சுதந்திரத்தைப் பெற பாரதம் முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டனர். ஆங்கிலேய அடிமைத்தளையை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.

ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் பூலித்தேவன்;  தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன்; தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்த திருப்பூர் குமரன்; வீரத் தழும்புகளை விருதுகளாய் சுமந்த மருது சகோதரர்கள்; வீரமங்கை வேலுநாச்சியார்; மாவீரன் வாஞ்சிநாதன்; விடுதலைப் போராளி தில்லையாடி வள்ளியம்மை; செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார்; தம் கவிதைகள் மூலம் விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதி; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; தீரர் சத்தியமூர்த்தி; சுப்ரமண்ய சிவா; தீரன் சின்னமலை; மாவீரன் அழகு முத்துக்கோன்; பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் என இந்திய விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாக சீலர்களை போற்றி வணங்குகிறேன்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் மக்கள் நலன் கருதியே அமைய வேண்டும். இந்தக் குறிக்கோளை எய்தும் வண்ணம், உங்கள் அன்புச் சகோதரியின் அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவது மட்டுமல்லாமல், விரைந்த வளர்ச்சி எய்தும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு இணையாக தமிழகத்தின் வளர்ச்சி இருத்தல் வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். இந்த லட்சியத்தை எய்தும் வண்ணமும்; தமிழ்நாட்டின் மொத்த வளர்ச்சி ஆண்டொன்றுக்கு 11 விழுக்காடு அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்; அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் 20 விழுக்காடு கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம், 2023 வகுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அன்புச் சகோதரியின் அரசு பதவியேற்று 15 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த 15 மாதங்களில் பல்வேறு சாதனைகளை எனது தலைமையிலான உங்கள் அரசு புரிந்துள்ளது.

வேளாண் துறையைப் பொறுத்தவரையில், 2010-2011 ஆம் ஆண்டில் 76 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2011-2012 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 106 லட்சம் மெட்ரிக் டன்கள் என உயர்ந்துள்ளது. காவேரியில் நமக்கு உரிய பங்கினை உரிய நேரத்தில் கர்நாடகம் விடுவிக்காததால், குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு குறைந்துவிட்டது. எனினும், எனது தலைமையிலான அரசு டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை வழங்கிய காரணத்தால், 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர் சாகுபடி வழக்கமான பரப்பளவில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக தொடர்ந்து திகழ வேண்டுமெனில் அதற்கு அடித்தளமாக அமைவது மனித வள மேம்பாடு தான். இந்த மனித வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வில் எனது அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்குதல்; நான்கு சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, பூகோள வரைபடம், பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்குதல்;

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்குதல்;

மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு  மிதிவண்டி வழங்குதல் ஆகியன சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உயர் கல்வியைப் பொறுத்த வரையில்,              தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்,  தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 22 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

              மக்கள் நல்வாழ்வை பொறுத்தவரையில், ஏழை, எளிய மக்கள் உயரிய சிகிச்சை பெற ஏதுவாக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு சானிட்டரி  நாப்கின்கள் வழங்கும் திட்டம்; தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலம் பேணிப் பாதுகாக்கும் வகையில் நோய் தடுப்புச் சேவையுடன் இணைந்து 12,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர பிரசவ சேவை, சிறந்த மருத்துவ வசதிகள் ஆகியவை நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கின்றன.

              கல்வி மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வுடன் தொழில் வளர்ச்சி ஏற்பட்டால் தான் கல்வி கற்றோர் வேலைவாய்ப்பினை பெறுவதுடன் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில், 5,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,530 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பையும்; 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பினையும் உருவாக்கும் வகையில், 5 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இன்னும் பல தொழில் நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இதே போன்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

              மேலும், கடந்த 15 மாதங்களில் மட்டும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 1,70,000 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 24,952 பணியிடங்களும்; வேலைவாய்ப்பகம் மூலம் 17,540 பணியிடங்களும்; 59,189 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும்; 1,432 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களும்; 13,376 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களும்; 205 உதவி ஆய்வாளர் பணியிடங்களும்; 2,874 மருத்துவப் பணியிடங்களும்; 16,793 சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களும்; 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,672 பணியிடங்களும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963 பணியிடங்களும் அடங்கும். இவற்றில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.  மீதமுள்ள பணியிடங்கள் ஒரு சில மாதங்களில் நிரப்பப்பட்டுவிடும்.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக விளங்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் வண்ணம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் எனது அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு முழுவதும் நீங்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஏழை, எளிய, சாமானிய மக்களும் தங்களுக்கு உரிய பங்கைப் பெறும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்து வருகிறது.

              குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்குதல்;

              ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்;

              கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்;

என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

              இதே போன்று, அரிசி பெறத் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  2011-2012 ஆம் ஆண்டில் 25 லட்சம் மின் விசிறிகள், மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 35 லட்சம் பயனாளிகளுக்கு இவை வழங்கப்படும்.

              மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய கிராம மக்கள் பயன்பெறும் வண்ணம், கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதுவரை 17,000 பயனாளிகளுக்கு 17,000 கறவைப் பசுக்களும், 1 லட்சத்து 70 ஆயிரம் பயனாளிகளுக்கு 6 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

              கிராமப்புற ஏழை மக்களின் வீட்டு வசதியை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டில்
1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 300 சதுர அடி கொண்ட 60,000 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இந்த ஆண்டும், 60,000 வீடுகள் கட்டப்படும். இதே போன்று தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் தேவைப்படும் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தாய் திட்டத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டில் 2020 கிராம ஊராட்சிகளில் உள்ள 25,335 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. நடப்பாண்டில் இத்திட்டப் பணிகளுக்கென 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரத் திருநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் உறவுகளாகிய இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இனிய நாளில், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; அவர்களுக்கான மருத்துவப்படி 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால் அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும். எல்லா விதத்திலும் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டினை கடைபிடிக்க வேண்டும்.  அது தான் உண்மையான சுதந்திரம்.  இந்த உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செயல்பட்டு வருகிறது. எனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று அடுத்தவரின் சுதந்திரத்தை, உரிமையை, வாழ்வாதாரத்தை பறிக்கும் விதத்திலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எவரேனும் செயல்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி,  அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும்; இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும்; அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும் நான் தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்து,

“உங்களுக்காக நான் என்பது மட்டுமல்ல; உங்களால் நான்” என்ற உணர்வோடு, நான் எனது கடமையை நிறைவேற்றிட தமிழக மக்களாகிய நீங்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,

சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும், பெருமையுடனும் சுவாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, விடை பெறுகிறேன்.

- இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

thanks dinamani

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு புதிய வலைத்தளம், எஸ்,எம்,எஸ் மூலம் ஒப்புகை செய்தி :முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு www.cmcell.th.gov.in  என்ற புதிய வலைத்தளத்தினையும்,மனுதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகைக் செய்தி அனுப்பும் முறையினை தொடங்கிவைத்தார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு  என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் ) மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்

ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,  தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும்,    முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள்  வாயிலாகவும்  நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.  இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து  எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு   cmcell.th.gov.in  என்ற புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  துவக்கி வைத்தார். இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு  உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.

புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.  சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள  முதலமைச்சர் தனிப்பிரிவின்  ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்  மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

தற்போது அனைவரிடமும் கைப்பேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் மூலம்  மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை தமிழக  முதலமைச்சர்  ஜெயலலிதா   துவக்கி வைத்தார். 

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன மாணாக்கருக்கு உதவித்தொகை


அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 1 லட்சத்திற்கும் அதிகமான வருமாணம் இல்லாமல் இருக்கு வேண்டும், குடும்பத்தில் எவரும் பட்டம் பெற்றவராக இருத்தல் கூடாது.  


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200ம் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.250ம், 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.500ம் படிப்புக் கட்டணமாக வழங்கப்படும்.

இலவச கல்வி திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த தேர்வுக் கட்டணங்கள் வழங்கப்படும்

மருத்துவம், பொறியிய்ல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உட்பட தொழிற்கல்வி பட்டப்படிப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு அதிகமாக இல்லாமலும், பட்டப்படிப்பு பெறமாலும் இருக்க வேண்டும். தனியார் தொழிற் கல்லூரிகள் ஒற்றை சாளர முறையில் அரசு ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.



பட்டயப்படிப்பு மற்றும் மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு அதிகமாக இல்லாமலும் இருக்கும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் வழங்கப்படும்.


மாணவர்கள் கல்வித்தொகையை பெற விரும்பினால் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவனங்களுடன் இணைத்து புதிய உதவித்தொகைக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும. விண்ணப்பிக்கும் குறித்த தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
.

தொழிற்கல்வி ITI -பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - தமிழக அரசு அறிவிப்பு

தொழிற்படிப்பு  பயிலும் மாணவர்களுக்கு இரண்டாயிரத்து இருபத்துமூன்று தொலைநோக்கு திட்டத்தின் படி இரண்டுகோடி பேரை வேலை வாய்ப்புக்கு ஏற்ற படி, பயிற்சி மற்றும் திறன் பெற்ற பணியாளர்களாக உருவாக்கும் நோக்குடன், திறன் பெற்ற மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனை அரசு கருத்திற்கொண்டு தொலைவிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து சென்று வர பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல இவர்களுக்கும் விலையில்லா மிதி வண்டி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்  21,925 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்  என அறிவிக்கப்பட்டுள்ளது.
   





வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு


 மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.


தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

   இந்த அறிவிப்பினை வெளியிட்ட தமிழக அரசுக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வாழ்த்துகளையும் நன்றியையும், அனைத்து மாணவ ஆசிரியர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.





புதன், 8 ஆகஸ்ட், 2012

இணைகிறேன்.....

I salute Mr.Manikandan State coordinator TAMS for his painful efforts to make a teacher dedicated blog 
                                             
Manjunathan TAMS P.R.O Vellore

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை அடுத்த மாதம் 8ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு, அது அரசிதழிலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. 

எனவே நாளை (வியாழக்கிழமை) அரசு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் அரசின் கீழ் இயங்கும் அனைத்து வாரியங்களுக்கும், துறைகளுக்கும் பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது..

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

9,10ம் வகுப்புகளுக்கு 2012- 13ல் முப்பருவ கல்விமுறை அமல்




 நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்த கல்வியாண்டில் (2013-14) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: வரும் 2013-14ம் கல்வியாண்டில், 9, 10ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை, முப்பருவ முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை உள்ளடக்கி தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு இணை இயக்குனரை, பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
பாடப் புத்தகங்கள் எழுதும் பணிக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும், அரசுக்கு, இயக்குனர் கருத்துரு அனுப்பினார். இதை பரிசீலித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில், பாட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்  சபிதா தெரிவித்து உள்ளார்.
அரசு உத்தரவுப்படி, தமிழ் பாடத்திற்கு - உமா; ஆங்கிலம் பாடம் - செல்லம்; கணிதம் - செல்வராஜ்; அறிவியல் - பாலமுருகன்; சமூக அறிவியல் பாடத்திற்கு - குப்புசாமி என ஐந்து இணை இயக்குனர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஏற்கனவே புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறைக்கு ஏற்றார்போல், சில மாற்றங்களை கொண்டு வருவது, பாடப் புத்தகங்களை பிரிப்பது மற்றும் தொடர் மதிப்பீட்டு முறைக்கான விதிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட பணிகளை குழு செய்யும்.
முப்பருவ கல்வி முறையில், 60 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும், 40 மதிப்பெண்கள் செய்முறைக்கும் பிரிக்கப்பட்டு உள்ளது.இதுவரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முழு ஆண்டுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, தேர்ச்சி முடிவு வெளியிடப்படுகிறது,என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பிற்கு, அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை. முதலில், 9ம் வகுப்பிற்கு திட்டத்தை நீட்டிப்பு செய்துவிட்டு, அதற்கு அடுத்த கல்வியாண்டில் (2014-15), பத்தாம் வகுப்பிற்கு அமல்படுத்தலாம் என, யோசித்து வருகிறோம்.
பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப் பட்டு உள்ளது. இக்குழு கூடி, 10ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்து, விதிமுறைகளை வகுக்கும்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பிற்கு, கட்டாய பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளி நடத்தும் தேர்வு, போர்டு நடத்தும் தேர்வு என, இரு வகையான தேர்வு நடத்தி, "கிரேடு&' முறையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான இடுகைகள்