செவ்வாய், 31 ஜூலை, 2012

கை நிறைய உதவித் தொகையுடன் உயர் கல்வி வாய்ப்பு...


மத்திய அரசின் கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளில் முக்கியமானது கிஷோர் வைக்யானிக் புரோத்ஸாஹன் யோஜனா (கே.வி.பி.ஒய்.) திட்டம். அடிப்படை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில், தாராளமாக கல்வி உதவித் தொகை (பி.ஹெச்.டி-பட்டம் பெறுவதற்கு முந்தைய நிலை வரை) பெறுவதற்கான இத்திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது. இதற்கான தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் விண்ணப்பங்கள் வெளியிடப்படும். இதன்பின் தேர்வுகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும். நிறைவாக டிசம்பரில் தேர்வு முடிவுகள் மற்றும் தரவரிசை (ரேங்க் லிஸ்ட்) வெளியிடப்படும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களை அறிய இணையதள முகவரி: www.kvpy.org.in

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதிச் சிறப்பிடம் பெற்றால் அவர்களுக்கு முதுகலை, எம்.ஃபில் பட்டப் படிப்பு படிக்கும் வரை மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 4 ஆயிரமும், இது தவிர ஆண்டு உதவித் தொகையாக ரூ. 16 ஆயிரமும் நேரடியாக வழங்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெற்றால், மாதம்தோறும் ரூ. 5 ஆயிரமும், இதுதவிர ஆண்டு உதவித் தொகையாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படும். மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கோடையில் சிறப்புப் பயிற்சி:  இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அட்டை வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் இஸ்ரோ, பெல்உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் பயிற்சி பெறலாம்.

உயர் கல்வி வாய்ப்பு: கே.வி.பி.ஒய். திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோர் போபால், கொல்கத்தா, புனே, மொஹாலி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) எம்.எஸ். முதுநிலை பட்டப் படிப்பில் (5 ஆண்டுகள்) சேர தாமாகவே தகுதி பெறுவர். இதுதவிர பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்ஸி) நிறுவனத்தில் பி.எஸ். என்ற இளநிலை பட்டப் படிப்பில் (4 ஆண்டுகள்) சேரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்