செவ்வாய், 31 ஜூலை, 2012

அரசு உதவிபெறும் பள்ளிகளில் "உபரி' ஆசிரியர் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

 தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு புதன்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.

அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்துப் பாடங்களுக்கும் சம அளவில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர்.
இதற்கென அமைக்கப்பட்ட குழு, பாட ஆசிரியர்களின் தேவை, ஆசிரியர் - மாணவர் விகிதம் ஆகியவற்றைக் கண்டறிந்து, உபரி ஆசிரியர்கள் மற்றும் தேவையின் அடிப்படையில் காலிப் பணியிடங்களைப் பட்டியலிட்டது. இதன்படி உபரி ஆசிரியர்கள், காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் இப் பணி முடிவடைந்த நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்ள இருக்கின்றனர்.
"அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாநில அளவிலான சீனியாரிட்டி மற்றும் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு பணி நிரவல் நடைபெறுகிறது. அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் "உபரி' பட்டியலில் சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு பணி நிரவல் இடமாற்றம் குதிரைக் கொம்பாக இருப்பதுடன், பணியாற்றும் பள்ளியிலும் அனைத்து சலுகைகளையும் இழக்கக்கூடிய அவல நிலை இருக்கிறது' என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:
அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும்பட்சத்தில், பல ஆண்டுகள் அனுபவமுள்ள ஆசிரியரையும் "உபரி' என்ற பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். இதன் மூலம் அந்த ஆசிரியர் எந்த நேரமும் வேறு பள்ளிக்கு மாற்றப்படலாம். இதற்கு பள்ளி கிடைப்பது ஒரு பிரச்னை. அப்படியே பள்ளி கிடைத்து பணியில் சேர்ந்தால், அங்கு இந்த ஆசிரியரின் சீனியாரிட்டி பாதிக்கப்படும். இடமாற்றம் கிடைக்காத பட்சத்தில் அதே பள்ளியில் "உபரி' என்ற ரீதியில் மன உளைச்சலுடன் பணியாற்றும் நிலை இருக்கிறது. மாணவர்கள் வருகை குறைவதற்கு, பள்ளிகளின் தரம் மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது. குறிப்பிட்ட சில பிரபலமான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையே, மேல்படிப்புக்கு சேர்க்க மறுக்கின்றனர். நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற மாணவர்களை வெளியேற்றும் அந்தப் பள்ளிகளை, கல்வித்துறை அதிகாரிகள் கண்டிக்க வேண்டும். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்புகள் தொடங்க அனுமதிப்பதால்தான், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
அதேபோன்று, பள்ளிகளின் நிலையை உயர்த்துவதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அறிந்து ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக கிராமப்புற பள்ளிகளை நிலை உயர்த்தும்போது, இந்த அளவுகோல் மிகமிக அவசியம். ஏனெனில் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழி கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளியை நிலை உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. அதோடு, ஆசிரியர்களுக்குத் தான் நெருக்கடி ஏற்படுகிறது.
அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பொருத்தவரை, கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு, உபரி பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு துவங்க உள்ள நிலையில், ஆசிரியர்களின் நிலையை நன்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
கணக்கெடுப்பு முடிந்தபிறகு பள்ளிக் கல்வித் துறை உயர்அதிகாரிகளால் உபரி ஆசிரியர்கள் மீது அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் கூறினர். 

நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்